Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
திமுக அரசை கண்டித்து திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
திருப்பூர் மாநகராட்சியில், அதிமு ஆட்சியில் எம்.சி.சி. எனப்படும் 25 நுண் உரமாக்கல் மையங்கள் மற்றும் 3 உலர் கழிவு மீட்பு மையங்கள் நிறுவப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து செயல்பட்டுக் கொண்டிருந்த மையங்களை முற்றிலுமாக முடக்கி வைத்து, தற்போது ஒவ்வொரு வார்டிலும் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல், 'டாலர் சிட்டி' என்ற பெயர் மாறி 'குப்பை நகரம்' என்ற நகரமாக மாற்றி, சுகாதார சீர்கேட்டின் காரணமாக நோய்த் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் முன்தேதியிட்டு குப்பை வரியை 150 சதவீதம் உயர்த்தியதோடு, குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீட்டு உரிமையாளர்களுக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்,
தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)
காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி முன்னாள் எம்.பி., திருப்பூர் (வடக்கு) தொகுதி கே.என்.விஜயகுமார்
எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அன்பகம் திருப்பதி, திருப்பூர் மாநகராட்சி கொறடா எம்.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த. கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b