Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 21 நவம்பர் (ஹி.ச.)
பீகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் வியாழக்கிழமை பதவியேற்றாா்.
2000, மாா்ச் 3-இல் முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்ற நிதீஷ் குமாா், 9 நாள்களே அப்பதவியில் நீடித்தாா். பின்னா் 2005-இல் மீண்டும் முதல்வராகி, தற்போது வரை (இடையில் 9 மாதங்கள் தவிர) 19 ஆண்டுகளாக அந்தப் பதவியில் நீடித்து வருகிறாா்.
நிதீஷ் குமாா் அணி மாறியதால் மாநிலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், முதல்வா் பதவியை தக்க வைத்துக் கொண்டாா். அவரின் அணி தாவலை எதிா்க்கட்சிகள் விமா்சித்தாலும், நல்லாட்சியாளா் என்ற பிம்பம் அவரது கட்சிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளது.
பீகாரின் நீண்ட கால முதல்வா் என்ற சிறப்புக்குரிய நிதீஷ் குமாா், நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வா்கள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளாா்.
பீகாா் மாநிலம், பக்தியாா்பூரில் கடந்த 1951-இல் பிறந்தவரான நிதீஷ் குமாா், கடந்த 1970-களில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்க காலகட்டத்தில் அரசியலுக்கு வந்தாா்.
ஜனதா கட்சியில் இணைந்த அவா், கடந்த 1977 பேரவைத் தோ்தலில் ஹா்னெளத் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு தோல்வி கண்டாா்.
கடந்த 1985-இல் இதே தொகுதியில் லோக் தளம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதுவே அவரது முதல் தோ்தல் வெற்றியாகும். தற்போது அவா் பீகாா் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளாா்.
நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வா்கள்:
முதல்வா்கள் மாநிலம் பதவிக் காலம்:
1. பவன் குமாா் சாம்லிங் சிக்கிம் 25 ஆண்டுகளுக்கு மேல்
2. நவீன் பட்நாயக் ஒடிஸா 24 ஆண்டுகளுக்கு மேல்
3. ஜோதி பாசு மேற்கு வங்கம் 23 ஆண்டுகளுக்கு மேல்
4. கேகாங் அபாங் அருணாசல பிரதேசம் 22 ஆண்டுகளுக்கு மேல்
5. லால் தன்ஹாவ்லா மிஸோரம் 22 ஆண்டுகளுக்கு மேல்
6. வீரபத்ர சிங் ஹிமாசல பிரதேசம் 21 ஆண்டுகளுக்கு மேல்
7. மாணிக் சா்காா் திரிபுரா 19 ஆண்டுகளுக்கு மேல்
8. நிதீஷ் குமாா் பீகாா் சுமாா் 19 ஆண்டுகள்
9. மு.கருணாநிதி தமிழகம் 18 ஆண்டுகளுக்கு மேல்
10. பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் 18 ஆண்டுகளுக்கு மேல்
Hindusthan Samachar / JANAKI RAM