Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
தூய்மைப் பணியாளர்களை கீழ்த்தரமாக நடத்தும் திமுக அரசு, இதுதான் உங்கள் சமூக நீதியா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே புதிதாக அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்கா பணிகளை திமுக அமைச்சர் கேஎன் நேரு ஆய்வு செய்ய வந்த போது அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவை குப்பை அள்ளும் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது திமுக அரசு தூய்மைப் பணியாளர்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.
தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்துவது போல் நடித்து விட்டு வெளியில் கபட நாடகம் ஆடும் திமுக அரசு அவர்களை மனசாட்சியே இல்லாமல் விலங்குகளை விட கேவலமாக நடத்துவது இந்த ஆட்சியின் சமூக நீதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஊர் விழிக்கும் முன்பே தாங்கள் விழித்து நகரையும், தெருக்களையும், கழிவுநீர் வாய்க்காலையும் சுத்தப்படுத்தி அசுத்தத்திலேயே வாழ்ந்து மக்கள் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு அதனை மிக காலதாமதமாக வழங்குவதாக புகார்கள் வந்து கொண்டிருப்பது அவர்களை இன்னும் வஞ்சிக்கும் செயலாக உள்ளது.
அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஏளனமாக சிரித்து எழுந்து சென்ற விதம் தூய்மைப் பணியாளர்களை விடியா திமுக அரசு கண்டுகொள்ளாததை உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உபகரணங்கள் பற்றாக்குறை போன்றவற்றை வலியுறுத்தி சென்னையில் நடத்திய போராட்டத்தையே கண்டுகொள்ளாமல் அவர்களை அப்புறப்படுத்திய அரசு தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் உணவினைக் கூட மனிதாபிமானம் இன்றி குப்பை அள்ளும் வாகனத்தில் வைத்துப் வழங்குவது திமுக அரசின் நவீன தீண்டாமைக்கு எடுத்துக்காட்டு.
இனியாவது தூய்மைப் பணியாளர்களின் பசியில் அரசியல் செய்யாமல், அவர்களின் பணிக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கிட இந்த விடியா திராவிட மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ