இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம், 21 நவம்பர் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், இரண்டாம் கட்டளை பெஸ்லி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது மகள் தேன்மொழி, தனியார் பள்ளி ஆசிரியராகவும், அவரது கணவர் ராமசாமி ஏமன் நாட்டிலும் பணி புரிந்து வந்துள்ளனர். இவர்களு
Double Murder Case


காஞ்சிபுரம், 21 நவம்பர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், இரண்டாம் கட்டளை பெஸ்லி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது மகள் தேன்மொழி, தனியார் பள்ளி ஆசிரியராகவும், அவரது கணவர் ராமசாமி ஏமன் நாட்டிலும் பணி புரிந்து வந்துள்ளனர்.

இவர்களுக்குச் சுரபிஸ்ரீ, குணஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி, வசந்தா, தேன்மொழி ஆகிய இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

கொள்ளைக்காரர்களால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மயங்கிக் கிடந்த சுரபிஸ்ரீ, மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து தனது தங்கை குணஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியே வந்த பின்னர் தான் இரட்டைக் கொலை மற்றும் கொள்ளை சம்பவமே பொது வெளியில் தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய குன்றத்தூர் போலீசார் கடந்த 2015 ஆம் ஆண்டு தேன்மொழி வீட்டில் வேலை செய்த பெண் சத்யா, அவரது தோழி தவ்லத்பேகம், இவர்களின் ஆண் நண்பர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 2015ஆம் ஆண்டு தங்களது வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காகத் தேன்மொழி ஆட்களைத் தேடிய போது, உறவினர்கள் மூலம் சத்யா, தவ்லத்பேகம் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். அதன் பின்னரும் அவ்வப்போது வந்து வேலை செய்து கொடுத்துள்ளனர்.

அப்போது, வீட்டில் நகை, பணம் இருப்பதையும், ஆண்கள் இல்லாத வீடு என்பதையும் தெரிந்து வைத்திருந்தனர். நகை, பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டு, வசந்தா மட்டும் தனியாக இருந்த நேரத்தை அறிந்து, மதியம் 3 மணியளவில் சத்யாவும், தவ்லத்பேகமும் வீட்டிற்கு சென்றுள்ளனர்

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் வந்திருப்பது குறித்துப் பள்ளிக்கூடம் சென்றிருந்த தேன்மொழிக்கு போன் மூலம் வசந்தாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சத்யா கொடுத்த தகவலின்பேரில் வீட்டுக்குள் வந்த ஜெயக்குமார் வசந்தாவை கத்தியால் குத்தி, அவர் அணிந்திருந்த நகைகளையும், வீட்டிலிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

சத்யாவும், தவ்லத்தும் மாலையில் தேன்மொழி வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து, அவர் வந்ததும் அவரையும் கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த குழந்தை சுரபிஸ்ரீ கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

பின்னர் சுரபிஸ்ரீ இறந்துவிட்டார் என்று நினைத்து 3 பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த சுரபிஸ்ரீயால் அனைத்து உண்மைகளும் வெளியே தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர். பல ஆண்டுகளாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தலா ஆறு ஆயுள் தண்டனைகள் விதித்தும், அதே போன்று தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி‌ தீப்தி தீர்ப்பளித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN