Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 21 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தீபத் திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பாக ஊர்காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம், பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (நவ 21) இரவு துர்க்கையம்மன் உற்சவம், நாளை இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறுகிறது.
தீபத் திருவிழாவை தொடர்ந்து நடைபெறும் 10 நாட்கள் விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிச. 3-ம் தேதி அதிகாலை ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் 2,668 அடி உயரமுள்ள தீபமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக 1,500 மீட்டர் காடாதுணி, 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
இந்த மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். இந்நிலையில், மகா தீபம் ஏற்றுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திலிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b