Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடத்தியது. இத்தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை மற்றும் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள மையங்களில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று(நவ 21) வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேரடி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-A (தொகுதி-IA பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று முற்பகல் நடைபெற்றது.
இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 முற்பகல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் www.tnpscexams.gov.in மற்றும் www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b