கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள் - துரைவைகோ எம்.பி பேட்டி
அரியலூர், 21 நவம்பர் (ஹி.ச.) மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்.பி அரியலூரில் இன்று (நவ 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, ஓர் அரசியல் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. மக
கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள் - துரைவைகோ எம்.பி பேட்டி


அரியலூர், 21 நவம்பர் (ஹி.ச.)

மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்.பி அரியலூரில் இன்று (நவ 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

ஓர் அரசியல் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. மக்கள் வாக்களித்து தான் ஓர் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் பஞ்சாங்கத்தை பார்த்து இந்த கட்சி ஆட்சிக்கு வரும், அந்தக் கட்சி ஆட்சியை இழக்கும் என நயினார் நாகேந்திரன் சொல்லி இருப்பது நகைப்புக்குரியது. நயினார் நாகேந்திரன் நல்ல ஒரு அரசியல்வாதி. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துள்ளார்.

நெல்லுக்கான ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 22 சதவீதமாக ஈரப்பதத்தை கூட்டினால் தான் விவசாயிகள் நெல்லை விற்க முடியும்.

ஆனால் இந்த கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வருகிறது. மத்திய குழுவினர் வருவார்கள், சுற்றுப்பயணம் செய்வார்கள். செய்தியாளர்களை சந்திப்பார்கள். கடைசியில் முடியாது என்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள். எனவே இக்கோரிக்கையை தமிழக அரசின் கோரிக்கையாகவோ, திமுகவின் கோரிக்கையாகவோ, நினைக்காமல் தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையாக மத்திய அரசு பார்க்க வேண்டும்.

இதில், அரசியல் பார்க்கக் கூடாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலமே பிஹாரில் வெற்றி பெற்றதாக அதிமுக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எஸ்ஐஆரில் தவறு செய்து தான், பிஹாரில் வெற்றி பெற்றதை அதிமுகவினர் ஒத்துக் கொள்கிறார்களா?. அதேபோல் தமிழ்நாட்டில் தகுதியான வாக்காளர்களை நீக்கிவிட்டு தகுதி இல்லாத வாக்காளர்களை சேர்த்து நாம் வெற்றி பெறுவோம் என அதிமுக தலைமை நினைக்கிறதா?.

பிஹார் வெற்றிக்கு எஸ்ஐஆர் மட்டும் காரணம் அல்ல. பிஹார் மாநில நிதியை தேர்தலுக்காகக் கொட்டி உள்ளார்கள். மாநில அரசின் நிதியை விரயம் செய்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தமிழக அரசு கண்காணிக்கிறது. ஆனால் மழைக்காலங்களில் இப்பணியை மேற்கொள்வது தான் பிரச்சினையாக உள்ளது.

மழைக்காலங்களில் மாவட்ட நிர்வாகமோ, வருவாய் துறையினரோ மழையினால் ஏற்படும் பாதிப்பை பார்ப்பார்களா, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா அல்லது எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வார்களா என்பது தெரியாமல் உள்ளது.

எஸ்ஐஆர் என்பது ஒன்று முதல் மூன்று வருட காலத்தில் நடக்க வேண்டியது. ஒரு மாதத்தில் நடத்துவதில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

எந்த நோக்கத்தோடு எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கமே அடிபட்டு விடும். அரசியல் காரணங்களுக்காக மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளது என பாஜக மூத்த நிர்வாகியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். ஆட்சி மாறினால் இத்திட்டம் கொண்டு வருவோம் என்பதன் மூலம் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மதுரை, கோவை மட்டுமல்ல திருச்சிக்கும் எப்போது மெட்ரோ வரும். 20 லட்சம் மக்களுக்கு குறைவாக உள்ளதால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என எங்கள் தலைமையிடம் கூறியுள்ளோம்.இதில் எங்கள் தலைமை, கூட்டணி தலைமை, கூடி முடிவெடுப்பார்கள். கூட்டணி தலைமை எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எல்லா இயக்கத்துக்கும் தனிப்பட்ட சின்னம் உண்டு.

அதில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. அதனை எங்கள் தலைமையும், கூட்டணி தலைமையும் முடிவெடுப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பெயரைக் கூட எனக்குச் சொல்லப் பிடிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b