Enter your Email Address to subscribe to our newsletters

டுரின், 21 நவம்பர் (ஹி.ச.)
இத்தாலியின் டுரின் நகரில் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது.
இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2', இத்தாலியின் ஜானிக் சின்னர், 'நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆண்டில் இருவரும் ஆறாவது முறையாக நேருக்கு நேர் மோதினர்.
முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை சின்னர் 7-6 என வசப்படுத்தினார். இரண்டாவது செட் 5-5 என இழுபறியாக இருந்தது. பின் சின்னர் 7-5 என கைப்பற்றினார்.
சொந்த மண்ணில் அசத்திய சின்னர், முடிவில் 7-6, 7-5 என நேர் செட்டில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்கவைத்துக் கொண்டார்.
தவிர அல்காரசிற்கு எதிராக 2025ல் சின்னர் தனது 2வது வெற்றியை (அல்காரஸ் 4 வெற்றி) பதிவு செய்தார். இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு கிடைத்தது. அல்காரஸ் ரூ. 24 கோடி பெற்றார்.
ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிசில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2024, 2025), ஒரு செட் கூட இழக்காமல், கோப்பை வென்ற முதல் வீரர் என வரலாறு படைத்தார் 24 வயது சின்னர்.
ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிசில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்கவைத்த 9வது வீரர் ஆனார் சின்னர்.
முன்னதாக லேடன் ஹெவிட் (2001-02, அமெரிக்கா), பெடரர் மூன்று முறை (2003-04, 2006-07, 2010-11, சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (2012-15, 2022-23) உள்ளிட்டோர் இது போல சாதித்தனர்.
சொந்தமண்ணில் தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கும் மேல் என ஏ.டி.பி., பைனல்ஸ் கோப்பை வென்ற மூன்றாவது வீரர் ஆனார் சின்னர்.
அமெரிக்காவின் மெக்கன்ரோ (3, நியூயார்க்), ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் (2, பிராங்பர்ட்) இது போல அசத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM