Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 நவம்பர் (ஹி.ச.)
சிவகாசியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி என்ற மோஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். முட்புதருக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் சிறுமி அணிந்திருந்த கவுன் கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் மஜாம் அலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மஜாம் அலி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் கிடையாது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனையின்போது அவரது உடலில் மஜாம் அலியின் முடி இருந்தது. இதனை டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் அந்த முடி அவருடையது என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மேல்முறையீட்டாளருக்கு கீழ்கோர்ட்டு தண்டனை விதித்து உள்ளது. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டாளருக்கு கீழ்கோர்ட்டு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்தும், இந்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN