Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், அம்பாசமுத்திரம், அம்பாசமுத்திரம் அனைத்து பெண்கள் காவல் நிலையம், விகேபுரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன்.
இதற்காக தமிழக காவல்துறை தலைவரிடம் பாராட்டு சான்றிதழையும் பெற்று இருக்கிறேன். எனது பணிக்காலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துவதை தடுத்திருக்கிறேன்.
என்னை இந்த பொறுப்பில் இருந்து அகற்றும் நோக்கில், பொய்யான பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத காவலில் வைத்து அருண் குமார் என்பவரது பல்லை உடைத்ததாக கூறப்படும் வழக்கும் அவ்வாறு பதியப்பட்டதே.
இவ்வாறாக என் மீது பதியப்பட்ட 4 வழக்குகளில் கிழமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில் என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சமீம்அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில்,
மனுதாரர் அம்பாசமுத்திரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு ஒழுங்கு பிரச்சனையை திறம்பட கையாண்டார். ரவுடிகள் பிரச்னையை ஒழித்துள்ளார்.
இதன் காரணமாக இவரை பழிவாங்கும் நோக்கில், சட்டவிரோத கும்பல் திட்டமிட்டு அவர்மீது புகார் கொடுத்துள்ளனர். ஊடகங்கள் மற்றும் பிற அழுத்தங்களின் காரணமாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் புதிதாக சேர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி அவருக்கு தமிழ் மொழி முழுமையாக தெரியாது. மேலும் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை, நெல்லை மாவட்ட நீதிபதி மனுதாரர் தரப்பு இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார் என கூறினார்.
இதைத் தொடர்ந்து, அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில்,
சம்மந்தப்பட்டவர்களை காவல்நிலையத்தில் வைத்து ஐபிஎஸ் அதிகாரா துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளார். அரசு நடத்திய தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் மொழியில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ஏன் என வழக்கு விசாரணையின் போது மனுதாரர் கேள்வி எழுப்பவில்லை.எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்ககூடாது என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, இடையீட்டு மனு தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட நபர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில்,
ஐபிஎஸ் அதிகாரி காவல் நிலையத்தில் கைதிகளை துன்புறுத்தி உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு தான் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் சார்பில் தன்னையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என வாதிட்டார்.
இதைதொடர்ந்து நீதிபதி ,
தமிழ் மொழியில் விசாரணை நடத்தப்பட்டு தமிழ் மொழியில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வாய்ப்பில்லை.
சாப்பிட்டீங்களா, உட்காருங்க என்று தமிழ் வார்த்தைகளை பேசினால் , அவர் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்று கூற முடியுமாஎனக்கும் அதே நிலை தான்.
மேலும் இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ சான்றுகளோ இல்லை.
மாவட்டநீதிமன்றம், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் , இயந்திரத்தனமாக ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
ஊடக அழுத்தம் மற்றும் பிற அழுத்தங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, நெல்லை மாவட்ட நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட் டு பதிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்படுகிறது,
மேலும் , இதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் எந்த விதமான விசாரணையும் நடத்துவதற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை
ஜனவரி 27 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ