Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 21 நவம்பர் (ஹி.ச.)
குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து செயல் அலுவலர் உச்சிமகாளி அளித்த புகாரின் அடிப்படையில், 6 பேர் மீது திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக, 2011 ஆம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை கேட்பதற்காக சுந்தரேசனை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், தற்போது மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக உள்ள சுந்தரேசன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த நெல்லை நடுவர் நீதிமன்ற நீதிபதி டென்சிங், டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன், தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வாகனத்தை விஐபி பாதுகாப்பு பணிக்கு அனுப்பி விட்டு, தனக்கு பழுதடைந்த வாகனத்தை உயரதிகாரிகள் கொடுத்துவிட்டதாக கூறி, கடந்த ஜூலை 17 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தான் நேர்மையாக வேலை செய்வதாகவும், அதனால் தனது மேலதிகாரிகள் மூவர் தன்னை டார்ச்சர் செய்து வருவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியானது பேசுபொருளானது.
அதனைத் தொடர்ந்து, அவரது குற்றச்சாட்டுகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, அவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார். அதன்பேரில், சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் சுந்தரேசன்மீது எடுக்கப்பட்ட முந்தைய ஒழுங்கு நடவடிக்கைளை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு பிறகு தற்போது மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுந்தரேசன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகதாதால் அவர் மீது தற்போது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN