Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை பகுதியை சேர்ந்த சக்திவேல் குமரன், வல்சல குமாரி தம்பதிக்கு முத்துசஞ்சனா என்ற 14 வயது பெண் குழந்தை இருந்தார்.
இவர் வால்பாறை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த நவம்பர் 10-ந் தேதி முத்துசஞ்சனா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது திடீரென உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவி முத்துசஞ்சனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துசஞ்சனா உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு மாணவி முத்துசஞ்சனா, தன்னுடைய வகுப்பு ஆசிரியைகள் கொடுமையால்தான் தீக்குளித்ததாக கூறியிருந்தாராம்.
இதனால் இந்த வழக்கில் விசாரணையின் கோணமே மாறி உள்ளது. மாணவி சாகும் முன்பாக பேசும் போது, கற்றல்குறைவு என்று கூறி தனி மேஜையில் ஆசிரியை அமர வைத்ததால் வேதனை அடைந்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தந்தை சக்திவேல் குமரன் கூறுகையில்,
எனது மகளின் இந்த முடிவுக்கு 3 ஆசிரியைகள்தான் காரணம். ஒரு ஆசிரியை என் மகளை அவமானமாக பேசியிருக்கிறார். விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் பள்ளி சென்றபோது, மற்றொரு ஆசிரியை நீ எதற்காக விடுமுறை எடுத்தாய்? என கேட்டு கன்னத்தில் அடித்திருக்கிறார். வேறொரு ஆசிரியை எனது மகளின் உருவம், தலைமுடி குறித்து கிண்டலாக பேசி புத்தகங்களை தூக்கி அவள் மீது எறிந்தாராம்.
ஆசிரியைகள் இப்படி அடுத்தடுத்து கொடுமை செய்ததால் உயிரை விட்டுவிட்டாள் என்று கூறினார். இதுதொடர்பாக பொள்ளாச்சி இடைநிலை கல்வி அதிகாரி மணிமாலா அந்த மாணவி படித்த அரசு பள்ளிக்கு நேரில் சென்று 3 ஆசிரியைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் வால்பாறை போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் தான் மாணவி சொன்னது உண்மையா இல்லையா என்பது தெரியவரும்.
Hindusthan Samachar / ANANDHAN