நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை, 21 நவம்பர் (ஹி.ச) நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்ட
Ttv


Tweet


சென்னை, 21 நவம்பர் (ஹி.ச)

நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்டும் என டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை முறையாகவும், முழுமையாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்ற புகார் எழுந்த நிலையிலும், கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியின்றி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையின் படி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவு அதிகரிக்கும் என நம்பியிருந்த தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு வேதனையுடன் கூடிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

எனவே, வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ