Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,21 நவம்பர் (ஹி.ச.)
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதித்தார். குறிப்பாக இந்தியா மீது 25 சதவீதம் வரியும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவின் ஜவுளி, இறால்கள், அலுமினியம் உள்ளிட்ட ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிறு-குறு-நடுத்தர தொழில்கள் நலிவடைந்தன.
இந்தநிலையில் வரிவிதிப்பை சீரமைத்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
முதற்கட்டமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் இந்த ஆண்டுக்குள் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
தற்போது இருநாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் இறுதிகட்டத்தில் உள்ளது. மேலும் வர்த்தகத்தை கடந்து பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அமெரிக்காவுடன் பிணைப்பை மேற்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு படியாக அடுத்த ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து சமையல் எரிவாயுவை வாங்க இந்தியாவின் அனைத்து முன்னணி எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பந்தமிட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவுடன் 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தத்தை இந்தியா ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்க மந்திரி பீட்டர் ஹெக்சேத் உடன் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு ரூ.823 கோடி (93 மில்லியன் டாலர்கள்) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்.ஜி.எம் 148 ஏவுகணைகள், 25 இலகு ரக ஜாவெலின் ஏவுகணைகள், 216 எக்ஸ்காலிபர் ரக பீரங்கி குண்டுகள் இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM