Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் வரும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை கடந்த நவ 04 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைய உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும்.
அதே போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா?என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும்.
ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
Hindusthan Samachar / vidya.b