Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படமான ’புரொடக்ஷன் நம்பர். 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவித்து படங்கள் தயாரித்து வரும் இந்நிறுவனம் தமிழ் சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது.
அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.3’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பாரத் மற்றும் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது சாந்தி டாக்கீஸ் நிறுவனம்.
படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா பகிர்ந்து கொண்டதாவது,
புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், ஃபைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர்.
இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. அதுபோலவே, ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ‘புரொடக்ஷன் நம்பர். 4’ படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம்.
பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம் என்றார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களைப் போலவே, ‘புரொடக்ஷன் நம்பர்.4’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து பல நம்பிக்கைக்குரிய படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தரமான நல்ல சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் படங்களைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
Hindusthan Samachar / Durai.J