Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 நவம்பர் (ஹி.ச.)
தண்ணீர் சுட வைக்க பயன்படும் எலெக்ட்ரிக் கெட்டிலை கொண்டு சமையல் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமாக உள்ளன.
அந்த வகையில் இந்த எலெக்ட்ரிக் கெட்டிலை வைத்து ரெயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், ரெயிலில் ஏ.சி. வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவர், இருக்கையில் அமர்ந்தபடி செல்போன் சார்ஜிங் போட பயன்படுத்தும் பிளக் பாயிண்டில் எலெக்ட்ரிக் கெட்டில் சாதனத்தை இணைத்து சமைக்கத் தொடங்குகிறார்.
இதனை அங்கிருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவில் அந்த பெண் மராத்தி மொழியில், இந்த சாதனத்தை பயன்படுத்தி 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் பெண் பயணியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரெயில்வே நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கும் பெண் பயணியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரெயில்வே சட்டத்தின் பிரிவு 147(1)-ன் கீழ் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய ரெயில்வே நிர்வாகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரெயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் தீவிபத்து உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b