Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 நவம்பர் (ஹி.ச.)
டில்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.
இதற்கிடையே டாக்டர்கள் அடங்கிய பயங்கரவாத கும்பல் மற்றும் டில்லி குண்டுவெடிப்பு பற்றி மத்திய உளவுத்துறையும் விசாரித்து முதற்கட்ட அறிக்கை அளித்து உள்ளனர்.
என்ஐஏ விசாரணையில் சதி திட்டம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டாக்டர் முசம்மில் ரூ.6.5 லட்சத்திற்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த ஏகே-47 துப்பாக்கி பின்னர் இணை குற்றவாளியான அடிலின் லாக்கரில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
2022ம் ஆண்டில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தெஹ்ரிக்-இ-தலிபான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு கையாளுநரான ஒகாசாவின் அறிவுறுத்தலின் பேரில், முசம்மில், அடில் மற்றும் முசாபர் ஆகியோர் துருக்கிக்கு பயணம் செய்தனர்.
முசம்மில், அடில் மற்றும் உமர் நபி ஆகியே மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசல், ஹசிம் மற்றும் உகாஷா ஆகியோருடன் டெலிகிராம் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல இடங்களில் வெடி பொருட்களை சேமித்து வைத்து அவற்றை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்ய இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM