Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?
உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ