பஜாஜ் நிதி நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி - காசாளர் கைது
நாமக்கல், 22 நவம்பர் (ஹி.ச.) நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தின், துணை மேலாளராக பணியாற்றி வரும் சுரேந்திரன் என்பவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: தனிநபர் கடன் பெற்ற வ
Namakkal Finance Case


நாமக்கல், 22 நவம்பர் (ஹி.ச.)

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தின், துணை மேலாளராக பணியாற்றி வரும் சுரேந்திரன் என்பவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:

தனிநபர் கடன் பெற்ற வாடிக்கையாளர்களில், யாரெல்லாம் முறையாக தவணை கட்டுகிறார்கள்.

யாரெல்லாம் கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு உரிய தகவல்கள் போய் சேருகிறதா என்பதை, சம்பந்தப்பட்டவர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்ட தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, நாமக்கல் கிளையில் தனிநபர் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் சிலரை தணிக்கை செய்தபோது, அருள்மணி என்பவர் முன்னதாகவே தவணைகளை கட்டியிருப்பது தெரியவந்தது.

அவரை தொடர்பு கொண்டபோது, தனது கடனை நாமக்கல் கிளைக்கு நேரில் வந்து காசாளர் சீனிவாசன்(38) என்பவரை நேரில் சந்தித்து, கடன் தொகையை வட்டியுடன் முழுவதையும் கட்டி முடித்து அதற்கான ரசீதும் அவர் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்து, மேலும் 5 வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டபோது, அருள்மணி கூறியதுபோல், அவர்களும் தெரிவித்தனர். இது குறித்து, திருச்சியில் உள்ள முதுநிலை மேலாளர் ராஜ்குமாரிடம் தெரிவித்தேன். அவரும், கணினியில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

மறுநாள் நாமக்கல் கிளைக்கு வந்த ராஜ்குமார், காசாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார். வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை பெற்றுக்கொண்டு, அவர்களின் கணக்கில் முழுமையாக வரவு வைக்காமல், கடன் கணக்கு முடித்தது போல் போலி சான்றிதழ்களை அவரே தயாரித்து கொடுத்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணம் ரூ. 43 லட்சத்து 5,333-ஐ நிறுவன கணக்கில் செலுத்தாமல், முறைகேடாக தன் சொந்த பண பரிமாற்றத்திற்கு வைத்துக்கொண்டதை ஒப்புக் கொண்டார்.

அதேபோல், 38 நபர்களின் கடன் கணக்குகளில், 6 கடன் கணக்குகளை ரூ. 80,919 செலுத்தி, மீதமுள்ள 32 கடன் கணக்குகளையும், அதன் மதிப்பான ரூ. 42 லட்சத்து, 24,414-ஐ, மார்ச் 31க்குள் முடித்து விடுவதாக எழுதிக்கொடுத்துவிட்டு பணிக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார்.

வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று நிறுவனத்துக்கு செலுத்தாமல், சொந்த பண பரிமாற்றத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி, பொதுமக்களையும், பஜாஜ் நிறுவனத்தையும் ஏமாற்றிய சீனிவாசனை கண்டுபிடித்து மோசடி பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். அவர், மும்பையில் பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், மும்பை தாராவியில் பதுங்கியிருந்த சீனிவாசனை கைது செய்து, நாமக்கல் அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN