கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார்
சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933 ஆம் ஆண்டு பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன் ஆகும். ஈரோடு தமிழன்பன் என அறியப்படும் இவர் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் என பன்முகம் கொண்டவர். இவர் மரபுக்கவிதை மற்ற
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார்


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933 ஆம் ஆண்டு பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன் ஆகும்.

ஈரோடு தமிழன்பன் என அறியப்படும் இவர் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் என பன்முகம் கொண்டவர். இவர் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் சிறந்தவர். இவரின் கவிதைத் தொகுப்பான வணக்கம் வள்ளுவ நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்ற பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள ஈரோடு தமிழன்பன், ஹைக்கூ கவிதையை தமிழில் பிரபலப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஆவார்.

பாரதிதாசன் மரபில் வந்த இவர், வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் மற்றும் அரிமா நோக்கு என்ற ஆய்விதழின் ஆசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

திரைத்துறையில் இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் தமிழில் 60க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளையும், 6 பெரும் தொகுதிகளையும் வெளியிட்டவர்.

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அண்மையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தமிழன்பன் இன்று (நவ 22) காலமானார்.

அவருக்கு வயது 92.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b