ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு
புட்டபர்த்தி, 22 நவம்பர் (ஹி.ச.) இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த நவ 20 ஆம் தேதி மாலை ரேணிகுண்டா வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆந்திர இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி வரவேற்றார். இதையடுத்து தி
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு


புட்டபர்த்தி, 22 நவம்பர் (ஹி.ச.)

இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த நவ 20 ஆம் தேதி மாலை ரேணிகுண்டா வந்தார்.

அவரை விமான நிலையத்தில் ஆந்திர இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி வரவேற்றார்.

இதையடுத்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு நேற்று (நவ 21) சென்று, முர்மு வழிபட்டார். இதைத் தொடர்ந்து காரில் திருமலைக்கு வந்த முர்முவை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வரவேற்றார். இரவு திருமலையில் முர்மு தங்கினார்.

ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புட்டபர்த்தியில் இன்று (நவ 22) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்திற்கு வந்த திரௌபதி முர்முவை, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் திரௌபதி முர்மு பேசியதாவது:

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தார். மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று அவர் பணியாற்றினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும்படியும், ஆன்மிகத்தை பொது மக்கள் நலனுக்கு பயன்படும் வகையில் பணியாற்றுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது துாண்டுதலால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

அவரது போதனைகள், எக்காலத்துக்கும் மனித குலத்துக்கு பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும்.

உலகமே ஒரு கல்விக்கூடம். அதில், உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி ஆகிய ஐந்தும் தான் பாடத்திட்டம் என்று நான் மனதார நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b