Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 22 நவம்பர் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் இன்று (நவ 22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
கால்நடைகளுக்குப் பால் கிடைக்காமல், ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள அரசு மலையை வெட்டத் தடை விதிக்கிறது. ஆனால் நமது அரசு குவாரியாக வெட்ட அனுமதி அளிக்கிறது. அதே நேரத்தில், தாமிரபரணி நீரை ஒரு பைசாவிற்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் அரசு, மக்களின் நலனில் அக்கறையில்லாதது என நிரூபிக்கிறது.
அரசு சாராயம் நல்ல சாராயம், மக்கள் விற்றால் கள்ளச்சாராயம் என்கிறார்கள். கள்ளக்குறிச்சி, மரக்காணம் சம்பவங்களுக்குப் பிறகும் அரசு விழித்துக் கொள்ளவில்லை. இலவசங்களுக்காக மக்களிடமிருந்தே பணம் எடுத்து மக்களுக்கே கொடுக்கிறார்கள். இதுவே அனைத்து விலை உயர்வுகளுக்கும் காரணம். மகளிர் உரிமைத் தொகைக்காக ஆண்டுக்கு ரூ.980 கோடி செலவிடுகிறார்கள், ஆனால் அதன் மூலத்தை சொல்லவில்லை.
பெண்களுக்கு இலவசப் பயணம் கொடுக்க, ஆண்களிடமிருந்து கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள். இதுதான் அரசின் பொருளாதார நிதி நிர்வாகம். திமுக, அதிமுக கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆட்சியை மாற்ற வேண்டாம், ஆட்சி முறையையே மாற்ற வேண்டும்.
தமிழ் வாழ வேண்டும் என்பதே என் கோரிக்கை.
தேவைப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்கலாம், ஆனால் தாய்மொழிக்கே முதன்மை கொடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும், மக்களின் பிரச்சனைகள் கேட்கப்படாது, தீர்க்கப்படும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b