Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 22 நவம்பர் (ஹி.ச.)
கீரணிப்பட்டியில் கிடைத்திருக்கிற கோச்சடைய மாறன் கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்புத்தூர் வட்டம் கீரணிப்பட்டி கிராமத்தில் பண்டைய பாண்டிய அரசரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர். இந்த கல்வெட்டு குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், பெரியகருப்பன், பழனியாண்டி, புகழேந்தி, மெய்யர், அடைக்கப்பன், பெருமாள் ஆகியோர் தொல்லியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் கரு. ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், கீரணிப்பட்டியின் கண்மாய் பகுதியில் இருந்த அந்த பலகைக்கல்லின் இருபுறங்களிலும் தெளிவான வட்டெழுத்து பொறிப்புகள் காணப்பட்டன. கல்லின் பின்புறத்தில் நின்ற நிலையில் ஒரு குதிரையின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது.
அதன் வடிவமைப்பு, எழுத்து முறை ஆகியவற்றை வைத்து அந்த கல்வெட்டானது கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர். குறிப்பாக, கோச்சடைய மாறனின் 10ஆம் ஆட்சியாண்டில் அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கல்வெட்டில், “சூரலூர் கூற்றத்து சூலூர்பேட்டையில் வசித்த ஆருவாரி என்பவருக்கு, கீரனூர் என அழைக்கப்பட்ட பண்டைய கிராமத்தின் பாவண்ஏரி பகுதியில் உள்ள அரை மாச்செய் அளவிலான நிலத்தை ஊரார் தானமாக வழங்கியுள்ளனர். இந்த தானத்தைக் குலைப்பவர் அல்லது மாற்றுபவர், இவ்வூரை அழிக்கும் பாவம் கொள்வான்” என்ற எச்சரிக்கை குறிப்பு பொறிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இது அக்காலத்தில் நில தானங்கள் வழங்கப்பட்டதையும், மத, சமூக பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர். மேலும் இன்றைய கீரணிப்பட்டியே, பண்டைய கீரனூர் என கருதப்படுவதற்கான பல வரலாற்று சான்றுகள் உள்ளன என ஆய்வாளர்கள் விளக்கினர்.
முதலாம் வரகுண பாண்டியனின் மறைவுக்குப் பிறகு அவரது புதல்வனான சீமாறன் சீவல்லபன் (கி.பி. 835–862) ஆட்சிக்கு வந்தார். இவரைச் சடையன் மாறன் என்றும் அழைத்தனர். இவரது ஆட்சிக்கால தகவல்கள் சின்னமனூர் செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், சித்தன்னவாசல் கல்வெட்டுகள் மற்றும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கீரணிப்பட்டிக்கு அடுத்துள்ள திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பதாகவும், அந்த கல்வெட்டுகள் வரலாற்றுடன் தொடர்புடையவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, பாண்டிய வரலாற்றையும், அந்த காலத்து நிலத் தான முறைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / ANANDHAN