Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 22 நவம்பர் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோரை இழந்த நிலையில், தனது பெரியம்மா வீட்டில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி சிறுமி மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பூசாரி தெருவை சேர்ந்த சதீஷ் குமார் (39) சிறுமியை கடத்தி தனது வீட்டிற்கு கொண்டுச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதற்கிடையே, கடைக்குச் சென்ற சிறுமியை திரும்பி வராததால், அவருடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது சதீஷ் குமார் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவருடை வீட்டிற்குச் சென்று உறவினர்கள் சிறுமியை மீட்டனர்.
பின்னர் இதுகுறித்து மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சதீஷ்குமார் திருமணமாகாதவர் என தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவில், மகிளா நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சதீஷ் குமாருக்கு போக்சோ பிரிவின் கீழ் 20 ஆண்டுகள், சிறுமியை கடத்தி சென்றதற்காக 7 ஆண்டுகள் என 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபாரதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார்.
குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்று கொடுத்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN