Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை, 23 நவம்பர் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு 33 பயணிகளுடன் தனியார் பேருந்து நேற்று (நவ 22) இரவு புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலகட்டா அடுத்த பேராய்பள்ளே மெட்டா என்ற இடத்தில் பயணிகள் கழிவறை செல்வதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி, பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில் பேருந்து , முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதனால் பேருந்தின் பின்பகுதியும், முன்பகுதியும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகள் அலறி துடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் பத்ரிநாத், ஹரிதா என்ற 2பேர் உடல் நசுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இன்று (நவ 23) அதிகாலை 2 மணி வரை நீடித்த மீட்பு பணியில் படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நந்தியால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஆலகட்டா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அதேபோல் பலியான 2பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நந்தியால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆலகட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து படுகாயம் அடைந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் குறித்தும், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b