Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை,23 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, நாள்தோறும் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இங்கு, பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 'டெண்டர்' விடப்பட்டு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நெய் பெறப்படுகிறது.
ஒய்.எஸ்.ஆர்.,காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அவ்வாறு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.
இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இதில், உத்தரகண்டைச் சேர்ந்த, 'போலே பாபா' பால் பண்ணை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய்யை திருமலை கோவிலுக்கு வினியோகித்தது தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் சமீபத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., குழு, அவரது முன்னாள் உதவியாளர் சின்னா உபன்னாவை கைது செய்தது.
இந்நிலையில், கலப்பட நெய் விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தான தற்போதைய தலைவர் பி.ஆர்.நாயுடு வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில்,
கடந்த, 2019 - 2024 வரையிலான காலக்கட்டத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, 48.76 கோடி லட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை.
'கோவிலில் தினசரி மக்கள் வருகை, கொள்முதல் விபரங்கள், லட்டு உற்பத்தி மற்றும் விற்பனை புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை வைத்து எளிய கணக்கீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.
என்றார்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியது,
'இந்த ஐந்து ஆண்டுகளில், 11 கோடி பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும், கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட லட்டுகள் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாது.
வி.வி.ஐ.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள் கூட கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியாது.
என தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM