Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 23 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பேருந்து ஒன்று 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தை திருச்செந்தூரை சேர்ந்த முருகன் என்பவர் இயக்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் பேருந்து பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியை கடந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையின் இடதுபுறம் சென்று புதிதாக கட்டப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் சுவரின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் ஓட்டுனர் முருகன்,நடத்துனர் ஜேம்ஸ் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கவே அங்கு சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கி இருந்த நான்கு பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து பயணிகள் கூறுகையில் ஓட்டுநர் பேருந்து இயங்கிக் கொண்டிருந்தபோதே மயக்கமடைந்ததாகவும் இருப்பினும் பேருந்து விபத்தில் சிக்காமல் இருக்க சாலையின் இடதுபுறம் திருப்பியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டுனருக்கு காய்ச்சல் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக மயக்கம் ஏற்பட்ட நிலையில் பேருந்து விபத்தில் சிக்காமல் இருக்கவே சாலையில் இடது புறம் பேருந்தை திருப்பியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Hindusthan Samachar / Durai.J