Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 23 நவம்பர் (ஹி.ச)
வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழக அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர்.
ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தளர்வு தராத மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி கண்டிக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டார்.
அதன்படி, இன்று (நவ.23) திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் தலைமையில், விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் கூறுகையில்,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களுக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்கின்ற நெல்லை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால், மழை வெள்ளம் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதமாக எடுப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான கடிதங்களை தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.
ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இலவச மின் திட்டத்தையும் ரத்து செய்கிற பிரதமரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN