ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தாஷமக்கான் திரைப்படத்தின் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச) IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின
Harish


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச)

IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”.

மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை, பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படத்தின் டைட்டில் புரமோ வீடியோ, பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக, திரையிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் படம் குறித்த தகவல்களைப் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்..,

நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது..,

முதல் முறை நான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுகத்திற்கு இப்படி ஒரு விழா. தாஷமக்கான் குழுவிற்கு என் நன்றி. தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் தரும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.

இயக்குநர் வினீத் வரபிரசாத் பேசியதாவது..,

டைட்டில் புரமோவிற்கு பலரை அழைக்கத் திட்டமிட்டோம் இறுதியாகப் பத்திரிக்கை நண்பர்கள் முன்பு அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்த போதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் தான். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் அவர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும் நன்றி.

நடிகை மேகா ராஜன் பேசியதாவது..,

எனக்கு இந்தப்படத்தில் அற்புதமான ரோல் தந்த இயக்குநர் வினீத்திற்கு நன்றி. டைரக்சன் டீம், கேமரா டீம், ஆர்ட் டீம் என எல்லோரும் மிகக் கச்சிதமாக இணைந்து வேலை செய்தார்கள். சத்யராஜ் சாருடனும், சுனில் சாருடனும் நடித்தது மகிழ்ச்சி. ஹரீஷ் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது..,

தாஷமக்கான் வட சென்னையின் மைய பகுதியாக இருக்கும் ஒரு ஏரிவை இயக்குநர் அந்த இடத்தை பலமுறை சுற்றிக்காட்டினார், க்ளைமாக்ஸ் ஃபைடில் 1000 பேர் கலந்துகொள்ளும் ஒரு ஃபைட், அதை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். சிங்கிள் ஷாட் எடுக்கும் போது நிறைய ஒத்துழைப்பு தந்து அசத்தினார் ஹரீஷ். சிங்கிள் ஷாட் அவ்வளவு பெரிய ஃபைட் சீன் எடுக்கக் காரணம் இயக்குநர் வினீத் தான். அவர் ஒரு மினி ராஜமௌலி மாதிரி தான். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநருக்கு நன்றி. என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ