ஜெயங்கொண்டம் அருகே வெண் பாதரசம் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது
அரியலூர், 23 நவம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (53). இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது நண்பர் குவாகம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (49). இருவரும் விட
Jayankondam Crime


அரியலூர், 23 நவம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (53).

இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இவரது நண்பர் குவாகம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (49). இருவரும் விடுமுறை தினங்களில் எப்போதாவது சந்தித்துக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் நவம்பர் 20ஆம் தேதி ஐயப்பன் தனது மனைவி அமுதாவுடன் சொந்த வேலையாக செங்குந்தபுரம் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மீனாம்பாடி இடுகாடு அருகே பாலசுப்பிரமணியனைச் சந்தித்துள்ளார்.

அப்போது பாலசுப்பிரமணியன், ஐயப்பனை அழைத்து தன்னிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளை பாதரசம் இருப்பதாகவும், அவற்றை விற்க உதவினால் பாதி தொகையை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதைக் கேட்டுச் சந்தேகமடைந்த ஐயப்பன் உடனடியாக பாலசுப்பிரமணியன் வந்த காருக்குள் எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது உள்ளே அடையாளம் தெரியாத 4 நபர்கள் இருந்துள்ளனர்.

கூடவே, 10 பாட்டில்களில் வெள்ளை பாதரசமும் இருந்துள்ளது.

இதைக் கண்டு அச்சமடைந்த ஐயப்பன், ஏதோ சரியில்லை என்பது போல் உணர்ந்துள்ளார்.

அதனால் அவர் பாலசுப்பிரமணியனிடம், 'இல்லை இல்லை... நான் உன்னோடு வரவில்லை. எனக்கு பணம் வேண்டாம்' என கூறியுள்ளார்.

இதைக்கேட்டு பாலசுப்பிரமணியன், ஐயப்பனை தன்னுடன் வரும்படியும், இதைப்பற்றி யாரிடத்திலாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் செய்வதறியாமல் இருந்து ஐயப்பன், அங்கிருந்து தப்பி ஜெயங்கொண்டம் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் மற்றும் அவருடன் வந்த 4 பேருக்கு வலைவீசி வந்த நிலையில் தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சதத்யுள்ளா மௌலானா (58), கேரளாவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (52), ஆத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (43), மதுரையைச் சேர்ந்த கோபால் (56) ஆகியோர் பாலசுப்பிரமணியனுடன் இருந்தது தெரிய வந்தது.

மேலும், அவர்கள் கடத்தி வந்தது உண்மையிலேயே பாதரசமா? எங்கிருந்து அவற்றை கடத்தி வந்தனர்? எப்படி ஒருவருக்கொருவர் பழக்கமானார்கள்? இவர்கள் வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN