Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 23 நவம்பர் (ஹி.ச.)
சென்னைக்கு செல்லும் மூன்று விரைவு ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் பெரும்பாலும் காட்பாடி வழியாகத்தான் பயணிக்கின்றன.
இந்நிலையில் இன்று சென்னைக்கு செல்கிற 3 முக்கிய விரைவு ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணித்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில்,
அரக்கோணம் - சென்னை மார்க்கத்தில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாகவே இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன என்று தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து நிறைய பயணிகள் அறிந்திராததால் அவர்களுடைய பயணம் பாதிக்கப்பட்டு காட்பாடி ரயில் நிலையத்திலேயே அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதானது.
காலை 10 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய லால் பாக் விரைவு ரயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டு, பிற்பகல் 3:45 மணிக்கு அசோகாபுரம் விரைவு ரயிலாக செல்லும்.
11:30 மணிக்கு வரும் இன்டர்சிட்டி ரயில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்படும்.
நண்பகல் 12 மணிக்கு வரும் அசோகாபுரம் விரைவு ரயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டு, மாலை 5:30 மணிக்கு லால் பாக் விரைவு ரயிலாக செல்லும்.
ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருப்பது குறித்து பயணிகள் கூறுகையில்,
எங்களுக்கு ரயில் நேர மாற்றம் குறித்து எதுவும் தெரியாது.
நாங்கள் சென்னைக்கு செல்வதற்காக இந்த ரயில்களில் வந்தோம். ஆனால் இப்படி காட்பாடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தி விடுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இங்கேயே நிற்கிறோம்.
பேருந்து மூலம் சென்னைக்கு செல்லவேண்டும் என்றாலும், ரயில் நிலையத்திலிருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்துதான் சென்னைக்கு பேருந்து ஏற முடியும் என்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத பயணி ஒருவர் கூறும்போது,
நான் சென்னைக்கு செல்ல லால் பாக் விரைவு ரயிலில் வந்தேன்.
ஆனால் ரயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி என்னால் சென்னைக்கு செல்ல முடியவில்லை.
இதுதொடர்பான முன்னறிவிப்போ அல்லது மாற்று வசதிகளோ எதுவும் செய்யப்படவில்லை.
இதுபோன்று மாற்றங்கள் செய்யப்பட்டால் ரயில்வே துறை பொதுமக்களுக்கு நேரடியாக தகவல் கொடுக்க வேண்டும் அல்லது மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN