பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் - அண்ணாமலை
சிவகங்கை, 23 நவம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அந்நாட்டு அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமானின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்கள
Annamalai


சிவகங்கை, 23 நவம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அந்நாட்டு அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமானின் திருமணம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை,

இலங்கைத் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ஜீவன் தொண்டமான், சிவகங்கை சீமையில் பெண் எடுத்திருப்பதன் மூலம் இரு தரப்புக்குமான தொப்புள் கொடி உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் கட்சி ரீதியாக நெருங்கிய தொடர்பு உண்டு.

பீகார் தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் தமிழர்களுடையது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, '

அது தவறான கருத்து. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பெண்கள் முன்னேற்றத்திற்காக முதற்கட்டமாக ரூ.10,000 வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகையை தேர்தலுக்கு பின் வழங்குவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் ரூ.2 லட்சம் தருவதாகக் கூறியும் மக்கள் அதை நம்பவில்லை. 25 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ் குமாரின் நிர்வாகத்தை நம்பியே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸுக்கு கிடைத்த வரலாறு காணாத தோல்வி (6 இடங்கள்), 2026-ல் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் நிச்சயம் கிடைக்கும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ''பிரதமர் மோடியின் செல்வாக்கு, நல்லரசு அமைய வேண்டும் என்ற மக்களின் விருப்பம், குடும்ப ஆட்சி எதிர்ப்பு ஆகியவற்றால் 2026 தமிழக தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும்.

எங்களை விட குறைவான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும், கூட்டணி தர்மத்திற்காகவும் நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராக்கியுள்ளோம். தங்களை விட குறைவான இடங்களை பெற்ற கட்சியை சேர்ந்தவரை முதலமைச்சராக்கிய வரலாறு காங்கிரஸுக்கு உண்டா? கொடுத்த வாக்கையும், மரியாதையையும் காக்கும் ஒரே கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணிதான் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN