உலக மரபு வார விழா - தொன்மை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
சிவகங்கை, 23 நவம்பர் (ஹி.ச.) உலக மரபு வாரத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து தொன்மை பாதுகாப்பை முன்னெடுத்த முப்பெரும் விழா இன்று (நவ. 23) நடைபெற்றது. சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக்குழு, சிவகங்கை மன்னர்
Students Awareness


சிவகங்கை, 23 நவம்பர் (ஹி.ச.)

உலக மரபு வாரத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து தொன்மை பாதுகாப்பை முன்னெடுத்த முப்பெரும் விழா இன்று (நவ. 23) நடைபெற்றது. சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக்குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடினர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 - 25 வரை உலக மரபு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. முதல் நிகழ்வாக, 246 ஆண்டுகள் பழமையான ஆங்கில கல்வெட்டு ஒன்று சிவகங்கை அரசு அருங்காட்சியகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு தொண்டி சாலை, சமத்துவபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டு, ஒரு கல்லறை கல்வெட்டு ஆகும். ‘1759 ஜூன் 1 அன்று பிறந்து, 1779 ஜூலை 25ஆம் தேதி இறந்த, திருமணமாகாத எலிசபெத் ஹெல்மர்’ என்ற ஆங்கில எழுத்துகள் இந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

1779 ஆம் ஆண்டு செதுக்கப்பட்ட இந்த கல்வெட்டு, ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தை சேர்ந்த வரலாற்று சான்றாக மதிக்கப்படுகிறது. அந்தகாலத்தில் ஆங்கிலேயப் படை வீரர்கள் மற்றும் நவாபின் சிப்பாய்கள் சிவகங்கையை காவல் செய்ததற்கான ஆதாரமாகவும் இது கருதப்படுகிறது.

தொடர்ந்து, 2வது நிகழ்வாக தொன்மையை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் 4 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.1,000 மற்றும் நான்காம் பரிசாக 500 ரூபாயும் வழங்கப்பட்டது.

இறுதியாக, ‘தொன்மையின் பெருமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தொல்நடைக்குழு தலைவர் நா. சுந்தரராஜன் தலைமையேற்றார். பல்வேறு வரலாற்றாளர், ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு, தொன்மை பாதுகாப்பின் அவசியத்தை விளக்கினர்.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் முக்கிய உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

Hindusthan Samachar / ANANDHAN