Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 நவம்பர் (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு பின்னர் பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்காமல் இருந்த விஜய், அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டினார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்கும் விஜய் ஆயத்தமாகி வருகிறார்.
சேலத்தில் இருந்து டிச.4-ல் விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கோரிகாவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்பு காரணங்களை கூறி, வேறு ஒரு தேதியில் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தினர்.
இதற்கிடையில் காஞ்சிபுரத்தில் இன்று
(நவ 23) விஜய், மக்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு கொடுக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தலைமை தெரிவித்துள்ளது.
35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2000 பங்கேற்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்பாளர்கள் தங்களின் குறைகளை விஜயிடம் நேரடியாக எடுத்துரைப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரியை சுற்றிலும் தகர சீட்டுகளால் மறைத்து உள்ளனர்.
இன்று அதிகாலை முதல் அதிக அளவில் பவுன்சர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் யாரும் வராத வகையில் தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b