Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்றது.
இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சமீப காலமாக கோயில் முன்புள்ள கடல் பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைமைக்கு திரும்புவதும் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் நீர் உள்வாங்கியும் காணப்படும்.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் இன்று (நவ 23) திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. இதனால், கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன.
அவற்றை பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் பக்தர்களை கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b