Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை காலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.
பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும், அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீப தரிசனத்தை காண வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் நாச வேலை தடுப்பு பிரிவினர்கள் உடன் தென்றல் என்கிற மோப்பநாய் உதவியுடன் திருக்கோயில் சுற்றியுள்ள 16 கால் மண்டபம் மற்றும் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேரின் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தென்றல் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN