Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 23 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் மாரம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு மாரம்பாடி பகுதியில் மேல்நிலை தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்தத் தொட்டி 1997-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்து வந்தது.
தொட்டியைத் தாங்கி நிற்கும் தூண்கள் பலவீனமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே, சேதமடைந்த தொட்டியிலேயே தொடர்ந்து குடிநீர் ஏற்றப்பட்டு, கீழே உள்ள குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
நேற்று நள்ளிரவில் தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் தொட்டி இடிந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது தொட்டி மோதி நின்றது. மின்கம்பமும் உடைந்து சாய்ந்தது.
பயங்கர சத்தம் கேட்டு விழித்தெழுந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டிக்க வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சுமார் 28 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்த இந்தத் தொட்டி இடிந்து விழுந்ததால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சம்பவ இடத்தில் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்சார வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து இடிபாடுகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.
புதிய தொட்டி கட்டுவது குறித்தும், அதுவரை லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN