Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்களின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், டிப்ளமா படிப்புகளுக்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதை முடித்து, அடுத்த மாதத்துக்குள், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலருக்கு, அவற்றை அனுப்ப வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கான ஊதியம் மற்றும் பணப்பலன்களை பெற, 'ஜென்யூனிட்டி சர்ட்டிபிகேட்' எனும் உண்மைத்தன்மை சான்று பெற வேண்டியது அவசியம்.
அதாவது, ஒருவர் பணியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்குள், அவருக்கான தலைவரிடம், தன் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், பட்டய படிப்புகளின் அசல் சான்றிதழ்களை காட்டி, நகலில் ஒப்புதல் பெற வேண்டும். அவற்றை, டி.இ.ஓ., - சி.இ.ஓ., வாயிலாக, அரசு தேர்வுகள் துறையில் இயங்கும் சான்றிதழ் சரிபார்ப்பகத்துக்கு அனுப்புவது வழக்கம்.
அங்கு, அந்த சான்றிதழ்களில் உள்ள விபரங்கள், தேர்வுத்துறை இயக்கக கருவூலத்தில் பதிவாகி உள்ள சான்றிதழுடன் ஒப்பிட்டு, 'உண்மைத்தன்மை சான்று' வழங்குவர்.
அதை, ஒவ்வொரு ஆய்வின் போதும் சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக, ஓய்வு பெற்று பணப்பலன்களை பெற, இந்த சான்றிதழ் கட்டாயம்.
ஆனால், தலைமை ஆசிரியர்கள் தங்களின் அதிகார எல்லைக்குள் பணியாற்றுவோரின் சான்றிதழ்களை சரிபார்த்து, உண்மைத்தன்மை சான்றிதழுக்கு விண்ணப்பித்தால், பள்ளிக் கல்வி இயக்ககத்தில் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.
அதனால், பலருக்கு உண்மைத்தன்மை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களை போலி ஆசிரியர் அல்ல என்பதை நிரூபிக்க, அந்த சான்றிதழ் அவசியம் தேவை.
அதனால், பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில், உண்மைத்தன்மை சான்று பெற்றவர்கள் விபரங்களையும், பெறாதோர் விபரங்களையும், மாவட்டம் வாரியாக தனித்தனியாக பராமரித்து வந்தாலே, இந்த பிரச்னை ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b