Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 24 நவம்பர் (ஹி.ச.)
கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு கடந்த
14-ந் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 21-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் ஆலப்புழை மாவட்டம் வயலார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வயலார் பெண்கள் வார்டில் அருணிமா என்ற திருநங்கையும், திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்தில் போத்தன்கோடு பெண்கள் வார்டில் அமேயா பிரசாத் என்ற திருநங்கையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் திருநங்கைக்கு பெண்கள் வார்டில் போட்டியிட முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் இவர்களது வேட்புமனுக்களை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
திருநங்கைக்கு பெண்கள் வார்டில் போட்டியிட முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது. இதை எதிர்த்து இருவரும் கேரள ஐகோர்ட்டை அணுகினர்.
இதை விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆவணங்களை பரிசோதித்து உரிய முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அருணிமா மற்றும் அமேயா பிரசாத்தின் ஆவணங்களை பரிசோதித்த மாவட்ட கலெக்டர்கள் தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இருவரையும் பெண்கள் வார்டில் போட்டியிட அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சி சார்பில் 2 திருநங்கைகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM