பெங்களூருவில் போலி கால்சென்டர் நடத்தியதாக மிரட்டி ஊழியர்களிடம் இருந்து ரூ.8.90 லட்சம் பணம் பறிப்பு - போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது
பெங்களூரு, 24 நவம்பர் (ஹி.ச.) பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கால்சென்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 21-ந் தேதி நள்ளிரவு 4 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் எனக்கூறி கொண்டு மர்மநபர்க
பெங்களூருவில் போலி கால்சென்டர் நடத்தியதாக மிரட்டி ஊழியர்களிடம் இருந்து ரூ.8.90 லட்சம் பணம் பறிப்பு - போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது


பெங்களூரு, 24 நவம்பர் (ஹி.ச.)

பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கால்சென்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அங்கு கடந்த 21-ந் தேதி நள்ளிரவு 4 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் எனக்கூறி கொண்டு மர்மநபர்கள் நிறுவனத்திற்குள் வந்தனர்.

பின்னர் ஒரு வழக்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்காக 4 பேரையும் கோரமங்களா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவும் மர்மநபர்கள் கூறினார்கள்.

பின்னர் 4 பேரையும் 2 கார்களில் ஏற்றிக் கொண்டு மர்மநபர்கள் அழைத்து சென்றனர். ஆனால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் 4 பேரையும் மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 4 பேரிடமும் ரூ.25 லட்சம் கொடுக்கும்படி மர்மநபர்கள் மிரட்டினார்கள். ஆனால் அவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளனர்.

பின்னர் 4 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை ஆன்லைன் மூலமாக தங்களது வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகளுக்கு மர்மநபர்கள் மாற்றினார்கள். ஒட்டு மொத்தமாக ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தை மர்மநபர்கள், 4 பேரிடம் இருந்து பறித்தனர். மேலும் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக ரூ.25 லட்சத்தை பெற்றுக் கொடுக்கும்படி மர்மநபர்கள் மிரட்டினார்கள்.

இதற்கிடையில், கால்சென்டர் ஊழியர்கள் கடத்தப்பட்டு இருப்பது பற்றி கோரமங்களா போலீசாரின் கவனத்திற்கு சென்றது. உடனே 4 ஊழியர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி துணை போலீஸ் கமிஷனர் சாரா பாத்திமா, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை பிடிக்க தீவிரம் காட்டினார்கள்.

இந்த நிலையில், கடத்தல் சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் மர்ம நபர்கள் இருக்கும் பகுதிக்கு போலீசார் சென்றனர். பின்னர் அங்கு வைத்து கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து கால்சென்டர் ஊழியர்கள் 4 பேரும் மீட்கப்பட்டனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் 8 பேரில் ஒருவர் போலீஸ்காரர் ஆவார். அவர் பெயர் சலபதி என்பதாகும்.

அவர், கோலார் மாவட்டம் மாலூர் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் பெயர் பவன், பரத், பிரசன்னா, ஆதிக், ஜபியுல்லா உள்பட 7 பேர் என்று தெரிந்தது. இவர்கள் 7 பேரும் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பவனும், சலபதியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பவன் ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார். அதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது.

கடனை அடைக்க திட்டமிட்ட பவன், போலீஸ்காரர் சலபதி உள்பட 7 பேருடன் சேர்ந்து கால்சென்டர் ஊழியர்களை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் ஏராளமான போலி கால்சென்டர்கள் செயல்பட்டு வருவதால், சலபதி மூலமாக போலி கால்சென்டர் நடத்துவதாக கூறி 4 பேரையும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

கைதான 8 பேரிடம் இருந்தும் ரூ.8.90 லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ்காரர் சலபதி உள்பட 8 பேர் மீதும் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Hindusthan Samachar / JANAKI RAM