Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 24 நவம்பர் (ஹி.ச.)
கோவையின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் கோயம்புத்தூர் விழா 2025 கடந்த 14ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
நாளை மறுதினத்துடன் விழா முடியும் நிலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான விழா வீதி எனும் மாபெரும் கலை விழா இன்று மாலை கிராஸ் கட் சாலையில் நடைபெற்றது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்றதால் மொத்த சாலையும் ஜன நெரிசலுடன் காணப்பட்டது.
லட்சுமி காம்ப்ளக்ஸ் பகுதியில் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்ற விழாவில் 17 வகையிலான வெவ்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சிகளை காண பெரும் திரளான மக்கள் அங்கு கூடி நடனம் ஆடி கொண்டாடினர்.
பறை இசை, ஜமாப், செண்டை மேளம்,நாட்டுப்புற நடனங்கள்,படுகர் நடனம்,வள்ளி கும்மி, நாதஸ்வரம் -தவில், பஞ்சாபி இசையை குறிக்கும் டோல், பாரம்பரிய உடைகள், நேரடி கலாச்சாரக் காட்சிகள், வண்ணமயமான அலங்காரங்கள் ஆகியவற்றுடன் நடைபெற்ற விழாவில்குடும்பத்துடனும் இளைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற கலைக்குழுவினருக்கு அவ்வப்போது விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / V.srini Vasan