Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
சென்னை - ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கு மத்திய தெற்கு ரயில்வே தரப்பில் விரிவான திட்டறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய வகையில் சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயிலை இயக்குவதற்கான, ரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நிலம் கையகப்படுத்துதல் உட்பட இந்த திட்டம் செயல்படுத்துவதில் உள்ள சாதக பாதகங்களைத் தமிழக அரசு ஆராய்ந்து அதற்கான திட்ட அறிக்கைக்கு இம்மாத இறுதிக்குள் தமிழக அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தக்கூடிய பணிகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டமானது சென்னை - ஹைதராபாத் இடையே வழக்கமான ரயில்கள் இயக்கப்படக்கூடிய கூடூர் வழித்தடத்திற்கு மாற்றாகத் திருப்பதி வழியாக இந்த வழித்தடத்தை அமைக்க வேண்டுமெனத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் சுமார் 12 மணி நேரமாக உள்ள பயணம் நேரம் 02:30 மணி நேரமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரயில் பாதைக்காக தமிழகத்தில் 223.4 ஹெக்டேர் நிலம் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 61 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக மீஞ்சூர் வெளிவட்ட சாலை வரை 11.6 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுரங்கப் பாதையாக இந்த திட்டம் கொண்டு வருவதற்கான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதோடு சென்னை சென்ட்ரல், மீஞ்சூர் வெளிவட்ட சாலை என இரு இடங்களில் அதிவேக ரயில் நிலையங்களை அமைக்கவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில்களை இயக்குவதற்கான அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN