Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
சென்னை போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில், 119 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், 47 கி.மீ., துாரமுள்ள மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன.
இந்த தடத்தில் பெரும்பாலும், மேம்பால பாதையாக இருப்பதால் பணிகள் தாமதமின்றி நடைபெற்று வருகின்றன. மாதவரம், ரெட்டேரி, கொளத்துார், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், மேம்பாலத்தில் பாதைகள் அமைத்து, தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட் - விருகம்பாக்கம் இடையே, ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட துாண்களில், மெட்ரோ ரயில் மேம்பாலம் இணைப்பு பணிகள், தற்போது முழு வீச்சில் நடக்கின்றன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில் பெரும்பாலும், மேம்பால பாதை என்பதால், பணிகள் தாமதமின்றி நடக்கின்றன. ஆரம்பத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, ஆழ்வார்திருநகர் வரை சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், ஓராண்டாக பணிகள் வேகமாக நடக்கின்றன.
கோயம்பேடு - நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலான மெட்ரோவில், தற்போது 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
விருகம்பாக்கம் முதல் நந்தம்பாக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில் தண்டவாளங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து விருகம்பாக்கம் தடத்தில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடித்து, கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b