Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 24 நவம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாமியார் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், அதேபோல் லத்தேரி பனையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் சித்தூரில் உள்ள குடிபாலா தாலுகா கொல்லமடுகு பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் கட்டாயப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை செய்து வந்துள்ளனர்.
அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் செங்கல் சூளை முதலாளி அடவாடியாக நடந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆந்திரவில் கொத்தடிமைகளாக இருக்கும் செய்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினருக்கு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆந்திராவில் இருந்து உடனடியாக மீட்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்த சித்தூர் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அனுப்பினார். சித்தூர் மாவட்டம் குடிபாலா தாசில்தார் தலைமையில் ஆந்திர வருவாய் துறையினர் கொல்லமடுகு செங்கல் சூலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், பாஸ்கர் மற்றும் கார்த்திக் குடும்பங்களைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் உள்பட மொத்தம் 11 பேரை கட்டாயப்படுத்தி கொத்தடிமைகளாக வேலை வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களை செங்கல் சூளையிலிருந்து மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பில் எடுத்தனர். தொடர்ந்து அவர்கள் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்களிடம் குடியாத்தம் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் சித்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இவர்கள் தமிழகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடிதம் பெறப்படவில்லை.
ஆகையால், விசாரணையை தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு கடிதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் முறைப்படி அவர்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என ஆந்திர வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அவர்களை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் மற்றும் கொத்தடிமையாக வைத்திருந்தவர்களிடமும் ஆந்திரா அரசு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் ஆந்திர அரசு இணைந்து சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN