Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டம், திருமலைக்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று (நவ 24) காலை சென்று கொண்டிருந்தது.
இதேபோல், தென்காசியில் இருந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் கிராமத்தில் இந்த 2 பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் 2 பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b