Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (நவ 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முதன் முதலில் வலியுறுத்தி, அவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, இது குறித்த கோரிக்கை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 50 விழுக்காடு மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கோரப்பட்டது.
இந்நிலையில், சில காரணங்களைச் சுட்டிக்காட்டி விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பியுள்ளது தமிழ்நாட்டு மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள சுடிதத்தில், 2017 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கைப்படி, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த இருக்கின்ற நகரங்களில் குறைந்தபட்சம் 20 இலட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டுமென்று தெரிவித்து, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை மற்றும் மதுரையில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை இருக்கிறது என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதையும், பயணியர் எண்ணிக்கை அதிகமாக கணிக்கப்பட்டு இருப்பதையும், வழிதடத்திற்கான சாலை வசதி 22 மீட்டர் அகலத்திற்கு குறைவாக இருக்குமிடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டியதையும் கட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
திமுக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட திட்ட அறிக்கைகளில் தற்போதைய மக்கள் தொகையை தெளிவாக குறிப்பிட்டு இருந்தால், நிலம் கையகப்படுத்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டினை தெரிவித்து இருந்தால், பயணியர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை ஆதாரத்துடன் தெளிவாக தெரிவித்து இருந்தால் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டு இருக்காது. ஆனால், இதனைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது.
இருப்பினும், இவற்றையெல்லாம் தன்னுடைய 22-11-2025 நாளிட்ட பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கிறார். இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது அப்பகுதி மக்களுடைய நீண்ட நாள் கனவு என்பதைக் கருத்தில் கொண்டும், இந்தத் திட்டம் அப்பகுதி மக்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும், இந்தத் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கிடுமாறு தமிழ்நாடு மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b