Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 24 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட்டில் 256 மி.மீ. ஊத்து எஸ்டேட்டில் 250 மி.மீ.,காக்காச்சியில் 225 மி.மீ. மாஞ்சோலையில் 210 மி.மீ. மழை பதிவானது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று (நவ 24) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் 28 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் நெல்லை கருப்பந்துறை, மேலநத்தம் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள், சீவலப்பேரி ஆற்றுப்பாலம், குப்பக்குறிச்சி சிப்காட் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நிரம்பிய நிலையில் உள்ள நீர்நிலைகளின் அருகே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது அதன் அருகே சென்று செல்பி எடுக்கவோ, குளிக்கவோ வேண்டாம். மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளதால் மெழுகுவர்த்தி, டார்ச் லைட் ஆகியவற்றை மக்கள் தயார் நிலையில் வைத்து கொள்வது அவசியம்.
மழை பெய்யும்போது பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ, மரத்தின் அருகிலோ தஞ்சமடைய வேண்டாம். துண்டித்து விழுந்த மின்கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மக்கள் 1077 மற்றும் 0461- 2501070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வணக்கம் நெல்லை 97865-66111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். ‘டி.என். அலார்ட்’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைப்பதன் மூலம் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b