Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 நவம்பர் (ஹி.ச.)
சேலத்தில் இருந்து ஈரோடு வரை மெமு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது இன்று
(நவம்பர் 24, 2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் வியாழன் அன்று தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் மெமு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
66621 எண் கொண்ட ரயில் காலை 6.15 மணிக்கு சேலம் ஜங்ஷனில் புறப்பட்டு 7.25 மணிக்கு ஈரோடு ஜங்ஷன் சென்றடைகிறது.
இடையில் மகுடஞ்சாவடி 6.29 மணி, சங்ககிரி துர்க் 6.49 மணி, காவேரி 7.04 மணிக்கு போய் சேர்கிறது. இறுதியாக 7.35 மணிக்கு ஈரோடு ஜங்ஷனுக்கு வருகிறது.
மறுமார்க்கத்தில் 66622 எண் கொண்ட ரயில் ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு மெமு ரயில் புறப்படுகிறது. காவேரி 7.38 மணி, சங்ககிரி துர்க் 7.54 மணி, மகுடஞ்சாவடி 8.09 மணி, சேலம் ஜங்ஷன் 8.45 மணிக்கு வந்து சேர்கிறது.
அனைத்து ரயில் நிலையங்களிலும் தலா ஒரு நிமிடம் மட்டும் மெமு ரயில் நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். சேலம் – ஈரோடு இடையில் இதுவரை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் மெமு ரயில் இயக்கம் என்பது உள்ளூர் மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஏனெனில் இரண்டு நகரங்களுக்கும் இடையில் கல்வி, வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை உறுதி செய்வதற்கு இந்த மெமு ரயில் சேவை உதவும். சேலத்தில் இருந்து ஈரோடு செல்ல பேருந்துகளில் எப்படியும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது.
அதுவே மெமு ரயில் சேவை மூல ஒரு மணி நேரம் 5 நிமிடங்களில் சென்றடைய முடியும். ஈரோடு என்றாலே ஜவுளி மற்றும் மஞ்சள் வர்த்தகம் தான் முதலில் நினைவிற்கு வரும். எனவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு புதிய மெமு ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் சேலம் – ஈரோடு நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து குறையும்.
Hindusthan Samachar / ANANDHAN