Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 24 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளான இன்று காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 7-ம் நாள் தேரோட்டத்தை தவிர்த்து மற்ற நாட்களில் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
மாட வீதிகளில் உலா வரும் பஞ்சமூர்த்திகளுக்கு திருக்குடைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்படும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற 3-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
Hindusthan Samachar / JANAKI RAM